saek/TN/01/2012
தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகவே நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிய வெறியாட்டத்தின் பகுதியாக அண்மையில் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் – நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமம் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக தொடர் இயக்கத்தை தமிழக அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சாதி ஒழிப்பு போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டிய அவசியமுள்ளது. இதையொட்டி பரந்த கூட்டமைப்பை உறுவாக்குவதற்கான ஒரு ஆலோசனைக் கூட்டம் 18.11.2012 அன்று தோழர் கோவை ஈஸ்வரன் தலைமையில் சென்னையில் நடந்தது. அதில் இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் இந்த கூட்டு இயக்கத்திற்கு ’சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம்’, தமிழ்நாடு என்று ஒருமித்த ஆதரவோடு பெயர் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி தோழர்கள், தோழர் கோவை ஈஸ்வரனை பணிந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி (ஒருங்கிணைப்பாளர்)
2. தி. மோகன்
3. கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை
4. கொற்றவை – மாசெஸ்
5. அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம்
6. பி.சி சண்முகசுந்தரம் – சி.பி.ஐ (எம்.எல்)
7. சாலமன் – இந்திய மக்கள் முன்னணி
தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான போராட்டங்களை சென்னை மற்றும் தர்மபுரியில் முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தொடர் சாதி ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான ஒரு கூட்டமைப்பாகநடைமுறை ஆய்வுகளுக்குட்பட்டு இக்கூட்டு இயக்கத்தை கொண்டுசெல்லுதல் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக நடக்கவிருக்கும் ஆர்பாட்டங்களில் வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள், கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது. கூட்டியக்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் 19.11.2012 மாலை 4 மணிக்கு கூடி ஆர்பாட்ட நிகழ்வுக்கான திட்டமிடுதல்களை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டு அன்றைய கூட்டம் நிறைவு பெற்றது.
அனைத்து உழைக்கும் மக்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், சாதி மறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இக்கூட்டியக்கத்தில் இணையலாம்.
தொடர்புக்கு –saek.tamilnadu@gmail.com
பதிவிட்டவர்: கொற்றவை
saek/TN/01/2012